சி.வை.தாமோதரனார் (1832 - 1901)

சி.வை.தாமோதரனார் (1832 - 1901)
அறிமுகம்
யாழ்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி எனும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் துறையிலும் கற்றுத் தேர்ந்தார். சட்டத்துறையிலும் பட்டம் பெற்றவர்.
பழந்தமிழ் நூல்களை சுவடிகளில் இருந்து அச்சில் பதிப்பித்ததில் ‘கால் கொண்டவர் ஆறுமுகநாவலர், சுவர் எழுப்பியவர் தாமோதரம், கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ. வே.சா ” -என தமிழறிஞர் திரு. வி. க. இவர் ஆற்றிய பணியை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.
தமிழ் மற்றும் சமுதாயப் பணி
- 1852-ல் தனது இருபதாவது அகவையில் கோப்பாய் ஆரியர் பயிற்சிக் கல்லுாரியில் ஆசிரியராக பணி புரிந்தார்.
- 1856 இல் “பெர்சிவல்” பாதிரியார் சென்னையில் நடத்திய “தினவர்த்தமானி’ இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
- 1857 இல் சென்னை மாநிலக்கல்லுாரியில் தமது தமிழ் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார்.
- 1884-ல் புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றினார் .
- தனித்தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்த படியால் அவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து பதிப்பித்து வெளியிடுவதே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படை பணிகளில் முதன்மை என்று கருதியவர் தமது நேரத்தை தமிழ் ஆராய்ச்சிகென்று செலவிட்டார்.
படைப்புகள்
- 1853-ல் ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலை தனது இருபதாவது அகவையில் பதிப்பித்து வெளியிட்டார்.
- வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
- தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்கு பெரும் புகழை தேடிக் கொடுத்தது அவரின் “கற்றோர் ஏற்றுங் கலித்தொகை” பதிப்பேயாகும்.
விருதுகள்/சிறப்புகள்
- 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமை பெற்றார் .
- 1895இல் “இராவ் பகதூர்” பட்டம் வழங்கப்பட்டது.
- "நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் -
வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ -
பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்
கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே! - மாயூரம் வேதநாயகம்
- "தொல்காப் பியமுதலாந்த தொன்னூல் களைப்பதிப்பித்து
ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின் - அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே" -உ வே சா
- ‘காமோதி வண்டர் கடிமலர்ந்தேன் கூட்டுதல்போ
னாமோது செந்தமிழி னனூல் பலதொகுத்த
தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றுவெவர்
தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர்’ -பரிதிமாற் கலைஞர்
ஆகியோர் இவரது புகழ் பாடியுள்ளனர்.