நசுப்பு (1916 – 2006)
ந.சுப்பு
(1916 – 2006)
அறிமுகம்
ந.சுப்பு அவர்கள் (ஆகத்து 27, 1916 - மே 1, 2006) தமிழறிஞரும், எழுத்தாளரும், பேராசிரியரும் ஆவார். இவர் எழுதியுள்ள 135 நூல்களையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.
பேராசிரியர் ந.சுப்பு ரெட்டியாரின் நூற்றாண்டு விழா திருச்சி மாவட் டதிலுள்ள பெரகம்பி கிராமத்தில் இன்று கொண்டாடப்படுகிறது.
பேராசிரியர் ந.சுப்பு ரெட்டியார் 1916-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருச்சி மாவட்டதிலுள்ள பெரகம்பி கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். திருச்சி சூசையப்பர் கல்லூரியில் வேதியியல் பட்டம் பெற்ற இவர், பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., பட்டமும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
தமிழ் மொழி மீதான ஈடுபாட்டாலும், இலக்கிய, சமய, அறிவியல் ஆர்வத்தாலும் ஏராளமான நூல்களை இவர் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள 135 நூல்களையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் 1960-ல் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றிய அவர், தமிழ்ப் பணிக்காகவும், நூல்களுக் காகவும் திரு.வி.க.விருது, திருக்குறள் விருது, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
கல்விப் பணியை ஓய்வின்றி யும், எழுத்துப் பணியை தொய்வில்லாமலும் தொடர்ந்து செய்துவந்த பேராசிரியர் ந.சுப்பு ரெட்டியார் 2006 மே-1 மறைந்தார். அவரது நூற்றாண்டையொட்டி இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரகம்பி கிராமத்தில் ஊர்மக்கள் சார்பாக படத்திறப்பு விழாவும், பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறு கிறது.