‘வண்ணச்சரபம்’தண்டபாணி சுவாமிகள் (1839-1898)

‘வண்ணச்சரபம்’தண்டபாணி சுவாமிகள் (1839-1898)

அறிமுகம் 

திருநெல்வேலியில்‌ செந்தில்‌ நாயகம்‌ பிள்ளை, பேச்சிமுத்து அம்மை என்பவருக்கு மகனாக (22-22-1839) பிறந்தார்‌. சங்கரலிங்கம்‌ என்ற இயற்பெயரையுடைய இவர்‌ தமது ஐம்பதாண்டுக்‌ காலத்தில்‌ நூறாயிரம்‌ கவிதைகளுக்கு மேல்‌ பாடியுள்ளார்‌. 

“இறைவனைப் போற்றுதல், தமிழைப் பேணிக் காத்தல், மனத்தை நெறிப்படுத்துதல், இயற்கையின் எழிலை எடுத்தியம்புதல், புதுமைகள் படைத்தல் ஆகிய ஐவகை நோக்கங்களை தன் குறிக்கோளாகக் கொண்டு அவற்றைப் பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தி வாழ்ந்து மறைந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்” என்கிறார் டாக்டர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன். 

தமிழ் மற்றும் சமுதாயப் பணி 

  • வடலூர் இராமலிங்க அடிகள் , ஆறுமுக நாவலர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சபாபதி முதலியார், பூண் அரங்கநாத முதலியார் ஆகியவரோடும் நெருக்கமாக உறவு பூண்டிருந்ததற்குக் காரணம் சுவாமிகள் நேசித்த தமிழே!
  • இவரை ‘தமிழ் வெறியர்’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குப் பின்வரும் பாடல்  சான்றாக அமைகிறது. “மதுரத் தமிழை இகழ் தீயோர் மணி நா அறுத்துக் கனலில் இ”.
  • தமிழ்ச்சுவை அறியாத்தெய்வம் உளது எனில் அஃது உணர் அவகையில் தாழ்வு எனல் அறமே” – . -என பாடியதின் மூலம் அவரது தமிழ் பற்றை நாம் உணரலாம் . 
  • ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தல், சிறு தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய மிருக பலியைத் தடுத்தல், சாதிக் கொடுமையை எதிர்த்தல், கைம்மைப் பெண்களின் திருமணத்தை ஆதரித்தல், தமிழில் அருச்சனையை ஊக்குவித்தல் ஆகிய கொள்கைகளைச் சுவாமிகள் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
  • வேறு சமூக நபர்களையும் நட்பால் உறவு கொண்டு சமூக நலமும் பேணுவதாகக் குடும்ப நலம் விரிந்து தழைக்க வேண்டும் என்கிறார்.
  • தண்டபாணி சுவாமிகளின் இறைமைக் கொள்கை என்பது சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டதாகும்.

படைப்புகள் 

  • சுவாமிகள் இயற்றிய பாடல்களில் ஓலைச் சுவடியிலும், அச்சிலும் மட்டுமே 49722 பாடல்கள் உள்ளன.  பாதிக்கு மேல் அச்சில் வராமல் சுவடியிலேயே, கோவை சரவணம்பட்டி கவுமார மடாலயப் பாதுகாப்பில் உள்ளன.
  • வருக்கக் குறள், மனு நெறித் திரு நூல், அருளாட்சி,அரசாட்சி நூல் போன்ற பொது நூல்களை இயற்றினார். 
  • திருவரங்கத் திருவாயிரம், சடகோபார் சதகத்தந்தாதி, அறுசமயக் கடவுள்கட்கு பழனித் திருவாயிரம், தில்லை திருவாயிரம் எழுதினார். 
  • திருவல்லிக்கேணி மீது திருவெழு கூற்றிருக்கை இயற்றினார். புதுவை வேத புரீசர் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் மீது ஐந்து நூல்களையும், திருவா மத்தூர் தல புராணத்தையும், 72 புலவர்களின் வரலாற்றை விவரிக்கும் புலவர் புராணத்தையும் இயற்றினார்.
  • கௌமார சமயத்தைப் பற்றி 14 நூல்கள் இயற்றினார். சூரியன், சிவன், அம்மன், திருமால், கணபதி, முருகன், பொதுக்கடவுள் ஆகிய ஏழு தெய்வங்கள் மீது வாரத்தில் ஒவ்வொரு நாள் ஒரு பதிகம் என்ற கணக்கில் ஏழாயிரப் பிரபந்தம்” என்ற நூலை இயற்றினார். 
  • பிரித்தானியர் ஆட்சி தமிழக மக்களுக்கு அநீதி இழைத்து வருவதைக் கண்டித்து மிகத் துணிச்சலாக “ஆங்கிலியர் அந்தாதி” பாடினார். 
  • தமிழின் சிறப்புகளை வரலாற்றுச் சான்றுகளோடு கூறும் “தமிழலங்காரம்” என்ற பாடல் பாடி வடமொழியை விட தமிழே உயர்ந்தது என வாதிட்டு வடமொழி வாணர்களை  வென்றார். 
  • எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றை ஐந்திலக்கணம் என்று அழைப்பதுண்டு. இதனோடு ஆறாவதாக “புலமை இலக்கணம்” எனும் பெயரில் சுவாமிகள் புதிதாக ஒன்றை உருவாக்கினார். 
  • அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு இம்மூன்றும் சுவாமிகள் கைவண்ணத்தில் உருவானவையே!
  • ‘தியானானுபூதி’ எனும் இவரது பாடல்களில் தியானத்தின் மேன்மையும்,  பயன்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

விருதுகள் 

  • ‘சர்வதாரணி’ எனும் எழுத்தாணி கொண்டு பனையோலையில் சந்தப் பாடல்களில் ஒரு வகையாகிய ‘வண்ணம்’ எழுதுவதிலும் சுவாமிகள் சிறந்து விளங்கியதால் தமிழறிந்த கற்றோர் இவரை “வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்” என்றே அழைக்கத் தொடங்கினர்.

முருக பக்தராக விளங்கியமையால் மக்களால் ‘திருப்புகழ் அடிகள்’ என்ற பெயரும், ‘சந்தப் பாடவலப் பெருமான்’, ‘முருக தாச அடிகள்’ ஆகிய பெயர்களும் சுவாமிகளுக்கு வழங்கப்பட்டன.