ப.ஜீவானந்தம் (1907 - 1963)

ப.ஜீவானந்தம்
(1907 - 1963)
அறிமுகம்
ப. ஜீவானந்தம் (P. Jeevanandham, 21 ஆகஸ்ட் 1907 – 18 ஜனவரி 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.
நூல்கள்
- இலக்கியச்சுவை
- ஈரோட்டுப் பாதை சரியா?
- கலை இலக்கியத்தின் புதிய பார்வை
- சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
- சமதர்மக் கீதங்கள் 1934
- சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
- சோஷலிஸ்ட் தத்துவங்கள்
- தேசத்தின் சொத்து (தொகுப்பு)
- நான் நாத்திகன் ஏன்? - பகத்சிங் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு; 1934; அரசால் பறிமுதல் செய்யப்பட்டது.
- புதுமைப்பெண்
- பெண்ணுரிமைக் கீதங்கள் (கடலூர்ச் சிறையில் இயற்றியவை) 1932
- மதமும் மனித வாழ்வும்
- மேடையில் ஜீவா (தொகுப்பு)
- மொழியைப்பற்றி
- ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
ஜீவாவின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தம் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளது. இவரின் பெயரால் புதுச்சேரியில் ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி பெயரிடப்பட்டுள்ளது. சென்னை, மேற்கு தாம்பரத்தில், இரயில்வே நிலையம் எதிரில் முழு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 08-05-1995 ல் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.