க.கைலாசபதி (1933 - 1982)

க.கைலாசபதி
(1933 - 1982)
அறிமுகம்
க.கைலாசபதி இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர், தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பத்திரிகை ஆசிரியர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார். பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957 இல் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.
தொழில்
பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.
இவரது நூல்கள்
பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
தமிழ் நாவல் இலக்கியம்,1968
Tamil Heroic Poetry,Oxford,1968
ஒப்பியல் இலக்கியம்,1969
அடியும் முடியும்,1970
ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971
இலக்கியமும் திறனாய்வும்,1976
கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
சமூகவியலும் இலக்கியமும்,1979
மக்கள்சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979
The Tamil Purist Movement - A Re-Evaluation,Social Scientist,Vol:7:10,Trivandrum
நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)
இலக்கியச் சிந்தனைகள்,1983, பாரதி ஆய்வுகள்,1984