அப்துல் ரகுமான் (1937 - 2017)

அப்துல் ரகுமான்

 

(1937 - 2017) 

 

அறிமுகம்

அப்துல் ரகுமான், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

பிறப்பு

அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

 கல்வி

அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

 பணி

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

 நூல்கள்

பால்வீதி, நேயர் விருப்பம், கரைகளே நதியாவதில்லை, அவளுக்கு நிலா என்று பெயர், முட்டைவாசிகள், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, விலங்குகள் இல்லாத கவிதை, சொந்தச் சிறைகள், புதுக்கவிதையில் குறியீடு, சுட்டுவிரல் பாடல், கம்பனின் அரசியல் கோட்பாடு, அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு, ஆலாபனை

 விருதுகள்

சாகித்ய அகாடமி விருது, கலைமாமணி விருது