சு வெங்கடேசன் (1970)

சு. வெங்கடேசன்
(1970)
அறிமுகம்
சு. வெங்கடேசன் மார்ச் 16, 1970-ம் ஆண்டு மதுரை மாவட்டம் ‘ஹார்விபட்டி’யில் இரா. சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். பள்ளி,கல்லுரி பருவத்திலேயே நாவல்,கவிதை என தமிழோடு கைக்கோர்த்தவர்.
தமிழ் மற்றும் சமுதாயப் பணி
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகிப் பின் அதன் (தமுஎகச) மதிப்புறு தலைவராக உள்ளார்.
- செம்மலர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
- தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
- உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்து களப்பணியாற்றியவர்.
- மதுரை நகரின் நாலாயிரம் வருட வரலாற்றைக் கொண்டாட ‘மாமதுரை போற்றுவோம்’ என்ற கலை விழாவை நடத்தியதில் ‘மூவரைக் கொண்ட குழு’வில் பங்கேற்றார்.
- தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி உள்ளிட்ட பல அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு இவரது ஆய்வுகளும், கட்டுரைகளும், களப்பணிகளும் மிக முக்கிய பங்காற்றின.
- தமிழ் செம்மொழி அந்தஸ்து, சல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களிலும் முக்கிய பங்காற்றினார்.
- திரைத்துறையில் எழுத்தாளராகவும் பணியாற்றியவர்.
- 2019-ஆம் ஆண்டு மதுரை தொகுதியிலிருந்து,இந்திய மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- தமிழக அரசின் கீழடி அகழாய்வு ஆலோசனைக் குழு உறுப்பினராக செயல்பட்டவர்.
- மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
- "கீழடி கண்டுபிடிப்பு: சங்ககாலம் குறித்த என்சிஆர்டி பாடத் திட்டத்தில் மாற்றம் தேவை: என மக்களவையில் வலியுறுத்தியவர்.
- அவருடைய நாடாளுமன்ற உரைகள் மொழி, இலக்கியம், வரலாறு, சமூகம் என முக்கியத்துவம் வாய்ந்தவை.
படைப்புகள்
- கல்லுரி பருவத்தில் எழுதிய "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் உட்பட ‘திசையெல்லாம் சூரியன்’, ‘பாசி வெளிச்சத்தில்’, ‘ஆதிப் புதிர்’ என 4 கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.,
- இவரின் ‘காவல் கோட்டம்’ நாவலின் ஒரு பகுதி “அரவான்” எனும் திரைப்படமாகவும், இன்னொரு சிறு பகுதி 2015-ல் ”சந்திரகாசம்” எனும் கிராபிக் நாவலாகவும் வெளிவந்துள்ளது
- ஆனந்த விகடனில் வெளிவந்த இவரின் வரலாற்றுத் தொடர்கள் தொகுக்கப்பட்டு ”வீரயுகநாயகன் வேள்பாரி” 2019-ல் நாவலாகவும், “வைகை நதிநாகரீகம்” -2018-ல் கட்டுரை நூலாகவும் வெளிவந்துள்ளது.
- இவர் எழுதிய பல கட்டுரை நூல்களில் ‘கலாச்சாரத்தின் அரசியல்’, ‘கறுப்பு கேட்கிறான் கிடா எங்கே?’, ‘சமயம் கடந்த தமிழ்’. போன்றவை முக்கியமானவை.
மொழிபெயர்ப்பு
- சீத்தாராம் யெச்சூரி எழுதிய 'இந்தி இந்துத்துவா இந்துராஜ்ஜியம்' நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
விருதுகள்
- “காவல் கோட்டம்” நாவலுக்காக ஆனந்த விகடன் விருது,சாகித்திய அகாதமி விருது 2011· உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது ‘காவல் கோட்டம்‘ நாவல் மற்றும், ‘வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை’ என இரண்டு முறை பெற்றுள்ளார்.
- ”வீரயுக நாயகன் வேள்பாரி”- நாவல் மலேசியா அடான் ஸ்ரீ கே..ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் வழங்கிய “அனைத்துலக சிறந்த படைப்பு விருது”, “ஆனந்த விகடன் நம்பிக்கை விருது”; “ சி. கே. கே. அறக்கட்டளை இலக்கிய விருது” உள்ளிட்ட பல விருதுகளை இவருக்குப் பெற்றுத்தந்தது.
சு.வெங்கடேசன்
பிறப்பு : 16.03.1970 (மதுரை)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர்.
கனடா இலக்கியத் தோட்ட விருது, நொய்யல் இலக்கிய விருது, ஆனந்த விகடன் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
முக்கிய நூல்கள்:
- காவல் கோட்டம் (சாகித்ய அகாடமி விருது)
- வேள்பாரி
- வைகை நதி நாகரிகம்
- கதைகளின் கதை