சீகன் பால்கு (1682 - 1719)
சீகன்பால்கு (1682 - 1719)
அறிமுகம்
சீகன்பால்கு ஜெர்மனியில் புல்ஸ்னிட்ஸ் என்னுமிடத்தில் 1682-ம் ஆண்டு ஜூலை 10ந்தேதி பிறந்தார். தமிழ்நாட்டிற்கு வந்த முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவார். கிறித்துவ மதம் பரப்பும் நோக்கில் தமிழகம் வந்த இவர் தொழிலாளர்கள் பேசும் போர்ச்சுக்கீசையும் தமிழையும் கற்றார். தமிழ்த் திருச்சபையின் தொடக்கம், தமிழிசை வழிபாடு, தமிழ் இறையியல் கல்வி, தமிழ் ஆசிரியப் பயிற்சி, தமிழ் மொழி ஆய்வு, சைவ இலக்கிய ஆய்வு, அச்சுக்கலையின் அடித்தளம், காகிதத் தொழிற்சாலையின் முன்னோடி, தமிழ்ப் பதிப்பாளர், மொழி பெயர்ப்பாளர் என பன்முக அடையாளங்களை கொண்டவர்.
தமிழ் மற்றும் இலக்கியப் பணி
- “தமிழ் மொழியே எனக்கு தாய் மொழியாகிவிட்டத” என்று பெருமையாக பதிவு செய்த சீகன்பால்கு இந்தியாவில் முதன் முதலாகத் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டினைக் காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார்.
- திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திசூடி ஆகியவற்றை ஓலைச்சுவடியில் இருந்து காகிதத்தில் அச்சடித்துப் புத்தகமாக வெளியிட்டார்.
- ஜெர்மனியில் உள்ள ஹால்வே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவுவதற்கு பெரும்பங்காற்றினார்.
- தரங்கம்பாடியில் சுமார் 300 நூல்கள் (பெரும்பகுதி ஓலைச்சுவடிகள்) அடங்கிய நூலகம் ஒன்றை தமது இறுதிக்காலத்தில் உருவாக்கினார்.
- தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாரில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, பித்தளை மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்துகள் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை உருவாக்கித் தமிழ்நாட்டில் அச்சுப்பண்பாடு வளரக் காரணமாக இருந்தார்.
- தொழிலாளர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும் குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். சென்னை மற்றும் கடலூரில் பல பள்ளிக் கூடங்களை நிறுவினார்.
- இந்தியாவில் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க 300 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கெனத் தனியாக முதல் பள்ளிக்கூடத்தை அமைத்து விதவைகளை ஆசிரியர்களாக்கி சமுதாய புரட்சிக்கு வித்திட்டவர்.
படைப்புகள்
- இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் (Grammatica Tamulica) எழுதியுள்ளார்
- தமிழ் ஜெர்மன் அகராதியையும் எழுதியுள்ளார்.
- தமிழ் நூல்களின் நூற்பட்டியல் ஒன்றையும் தொகுத்துள்ளார்.
- தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
- இந்திய மொழிகளில் தமிழில் வேதாகமத்தை முதன் முதலில் மொழிபெயர்த்து அச்சடித்து நூலாகத் தந்தவர்.
விருதுகள்/பட்டங்கள்/சிறப்புகள்
- இந்தியாவில் முதன்முதலாக அச்சுக் கலையை அறிமுகம் செய்த இவர் 'இந்தியாவின் அச்சக தந்தை' என போற்றப்படுகிறார்.
- 1718-ல் தரங்கம்பாடியில் அவர் எழுப்பிய புதிய ஜெருசலேம் ஆலயத்தில், அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது.