செந்தமிழ்சிற்பிகள்

'பண்டிதமணி' மு.கதிரேசனார் (1881 - 1953)

 'பண்டிதமணி' மு.கதிரேசனார் (1881 - 1953)

பண்டிதமணி என அழைக்கப்பட்ட மு. கதிரேசச் செட்டியார் ஏழு மாதங்கள் கூட பள்ளியில் படிக்காமல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். வடமொழி நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தவர். பல தமிழறிஞர்களுக்குப் பாடம் சொன்னவர். சிறந்த சொற்பொழிவாளர். இரு பொருள் படப் பேசுவதில் வல்லவர். தமிழாய்வு செய்து தமிழ்த்தொண்டாற்றியவர்.

பிறப்பும் கல்வியும்

கதிரேச செட்டியார் மகிபாலன் பட்டியில் முத்துகருப்பன், சிவப்பி ஆச்சி அவர்களுக்கு 16-09-1881 அன்று பிறந்தார். சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாத நோயால் துன்புற்றார். தந்தை மலேசியா இலங்கை முதலிய நாடுகளுக்கு வாணிகம் செய்யச் சென்றதால் இவர் தனது ஏழாம் வயதில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார். அப்பொழுதே ஆத்திசூடி, உலக நீதி ஆகியவற்றின் சொல்லழகு இவரைக் கவர்ந்ததால் படிப்படியாகத் திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம், சில பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆகியவற்றைத் தாமே ஓதி உணர்ந்தார்.

இளமை

அக்காலத்தில் இருந்த தம் குல வழக்கப்படி தனது 11-ஆம் வயதில் பொருளீட்டுவதற்காக இலங்கை சென்றார். இலங்கையின் எழிலில் அவர் மனம் பறி கொடுத்த நேரத்தில் அவருக்கு மீண்டும் வாத நோயின் கொடுமை தலைகாட்டியது. அப்பொழுது தனது தந்தையின் திடீர் மரணம் அவருக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது. உடலும் உள்ளமும் மிகவும் நலிவுற்ற நிலையில் தனது 14-ஆம் வயதில் அவர் தாய்நாடு திரும்பினார். நோய் தீவிரமானதால் ஊன்று கோலின்றி நடக்க முடியாத நிலைக்கு ஆளானார்.

தமிழின் மீதுள்ள ஆர்வம் காரணமாகத் தனது நோயின் காரணமாக நடமாட முடியாமையால் கிடைத்த ஓய்வு நேரத்தில் தமிழ் நூல்களை ஊன்றிக் கற்றார். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், திருவாசகம், புறநானூறு, திருக்குறள், கம்பராமாயணம் ஆகியவற்றை இவர் ஆசிரியர் இல்லாமலே ஆழ்ந்து கற்றார். தொல்காப்பியத்தையும் அதற்கான சேனாவரையரின் உரையையும் தன் ஆருயிர் நண்பரான அரசஞ்சண்முகனாரிடம் பாடம் கேட்டார்.

இலக்கியப்பணி

அரசஞ்சண்முகனாரின் மூலம் மதுரை 'வித்யா பானு' அச்சகத்தின் உரிமையாளரான மு. ரா. கந்தசாமிக் கவிராயரின் நட்பு கதிரேசனாருக்குக் கிடைத்தது. இதன் பயனாய் இவர் வித்யாபாநு இதழுக்குப் பல அரிய தமிழ் கட்டுரைகள் எழுதினார்.

இலக்கிய நட்பும் சொற்பொழிவும்

இக்காலத்தில் கதிரேசருக்கு, தமிழ்ப் பெருங்கவி இராவ் சாகிப் வெ. . சுப்பிரமணிய முதலியார், பசுமலை, நாவலர் . சோமசுந்தர பாரதி, ரா இராகவையங்கார் , மறைமலை அடிகள், ஞானியார் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. சொல்லழகும் பொருளழகும் ஒருங்கே அமையப்பெற்ற ஞானியாரின் சொற்பொழிவுகளால் கவரப்பட்ட கதிரேசனார் தாமும் சொற்பொழிவாற்ற வேண்டுமென ஆர்வம் கொண்டார். இந்த ஆர்வம் அவரை ஒரு முதல் தர சொற்பொழிவாளராக ஆக்கியது.

பாண்டித்துரை தேவரும் பண்டித மணியும்

கதிரேசனாரின் நண்பரான ரா. ராகவையங்கார் இவரைப் பாண்டித்துரைத் தேவருக்கு அறிமுகம் செய்தார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைக்க வேண்டும் எனப் பாண்டித்துரைத் தேவர் முயன்று கொண்டிருந்த காலம் அது. கதிரேசனாரின் புலமைக்கு மரியாதை செலுத்த விரும்பிய தேவர் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்த புலவர்களில் ஒருவராகக் கதிரேசனாரையும் சேர்த்தார்.

வடமொழிப் புலமை

தமிழ் மொழியில் பெரும் புலமை பெற்றிருந்த கதிரேசனார் வட மொழியிலும் புலமை பெற்றால் தன் புலமை முழுமை அடையும் என எண்ணி தருவை. நாராயண சாஸ்திரியாரிடம் ஐந்து ஆண்டுகள் வடமொழியைக் கற்றார். தனது இருமொழிப் புலமையால் ஆய்ந்து தமிழ் மற்றொரு மொழியினின்று தோன்றியதென்றால் பிறிதின் சார்பின்றி நடைபெறாதென்றாதல் கூறுவார், உண்மை ஆராய்ச்சி இலராவர். ஒரு சில வட சொற்கள் உண்மை பற்றித் தமிழ் மொழியை வட மொழியினின்றும் தோன்றியதென்றால் பொருந்தாத ஒன்றாகும் என்றும் தமக்குரிய மொழியைப் புறக்கணித்து வேற்று மொழியில் எத்துணை மேற்சென்றாலும் மொழியறிவால் பெறும் பயன் முற்றும் எய்தாது என்றும் கூறியுள்ளார்.

தமிழ்த்தொண்டு

கதிரேசனாரின் துவக்க காலத் தமிழ்த் தொண்டில் குறிப்பிடத்தக்கது மேலைச் சிவபுரியில் இவர் அமைத்து நடத்திய 'சன்மார்க்க சபை' ஆகும். பொருளியலில் காட்டிய ஆர்வத்தை நகரத்தார் கல்வியில் காட்டாதிருந்த அக்காலத்தில் சன்மார்க்க சபையின் மூலம் அவ்வினத்தாரிடம் தமிழார்வத்தைத் தூண்டி வளர்த்த பெருமை கதிரேசனாரையே சாரும். இதற்கு பொருளுதவி செய்தவர் பழநியப்ப செட்டியார் என்ற பெரும் செல்வராவார். மேலும் இச்சபையின் பிரிவுகளாக 'கணேசர் செந்தமிழ்க் கலாசாலை', 'தொல்காப்பியனார் நூல் நிலையம்' ஆகியவை ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றன. இச்சபை பல பேரறிஞர்கள் முன்னிலையில் இவரின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியது அக்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்கள் இச்சபையில் சொற்பொழிவாற்றியுள்ளனர். இவர்களில் திரு. வி. ., . வே. சாமிநாதைய்யர், மகாவித்துவான் ரா. ராகவ ஐயங்கார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, . மு. வேங்கடசாமி நாட்டார், சுவாமி விபுலானந்தர், உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இச்சபையின் ஆதரவால் தான் பண்டிதமணி அவர்கள் 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை' தமிழில் மொழிபெயர்க்கத் துவங்கினார். ஆனால், இப்பணி இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போதுதான் முடிவுற்றது. இச்சபையின் சார்பாகத் துவக்கப்பட்ட 'கணேசர் செந்தமிழ்க் கல்லூரி', சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சிறப்புடன் நடந்து இன்றும் இவரின் தமிழ்த்தொண்டினை நினைவூட்டும் சின்னமாக விளங்குகிறது.

சமயத்தொண்டு

பண்டித மணி சமயத்துறையில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். மணிவாசகப் பெருமானிடம் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக அண்ணமலை நகரில் இருந்த போது 'மணிவாசக மன்றம் 'என்ற பேரவையைத் தோற்றுவித்தார். அவர் எழுதியுள்ள ' சமயக் கட்டுரைகள்' (உரைநடைக் கோவை-முதற்பகுதி) இவரின் சமய அறிவின் மேன்மை, நுண்மை, சமய விரிவு ஆகியவற்றைக் காட்டும். கதிரேசனாரின் பெரும் தொண்டுகளில் மணிமகுடமாக விளங்குவது அவர் திருவாசகத்திற்கு எழுதிய விளக்கவுரை ஆகும். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் போதும் திருவாசகத்திற்கு உரை எழுதுவதில் பெரும் அமைதி கண்டார். இவரது உரை 1950 ஆம் ஆண்டு, தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரின் ஆராய்ச்சித் துறைக்கான பரிசினைப் பெற்றது.

செட்டிநாட்டரசரும் கதிரேசனாரும்

கதிரேசனாரிடம் நட்பு கொண்டு பழகியவர்களில் செட்டிநாட்டரசரான அண்ணாமலைச் செட்டியாரும் ஒருவர். கதிரேசனாரிடம் அண்ணாமலைச் செட்டியார் வைத்திருந்த பேரன்பும் பெருமதிப்பும் கதிரேசனாரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பணியை மேற்கொள்ளச் செய்தது. அவரின் விடாப்பிடியான வேண்டுகோளின் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பணி செய்தார். அக்காலத்தில் இவருடன் பணியாற்றியவர் சுப்பிரமணியப் பிள்ளை. பண்டிதமணி பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியை மேற்கொண்ட போது அவருக்கு வயது 53 ஆகும். முதிர்ந்த அறிவும் பழுத்த அனுபவமும் பாடம் சொல்லும் திறனும் மாணவர்களிடம் மிகுந்த தமிழார்வத்தைத் தூண்டின. இவரிடம் பாடம் கேட்பதற்காகவே சிலர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர். இவரிடம் பயின்று பிற்காலத்தில் சிறப்பு பெற்ற சிலர்:

. சிதம்பரநாதச் செட்டியார்

எஸ். உருத்திரபதி

மீனாட்சி சுந்தரனார்

பூ. ஆலால சுந்தரம் செட்டியார்

சரவண ஆறுமுக முதலியார்

. முத்துசிவன்

. சுப மாணிக்கம்

ரம்போலா மஸ்கரனேசு

இரா. நெடுஞ்செழியன்

. அன்பழகன்

கோவிந்தராசனார்

இராசாமணி அம்மையார்

.இராசரத்தினம் அம்மையார்

தம் தமிழ் புலமையால் அனைவரையும் கட்டிய பண்டிதமணி 1946-ல் உடல் நலக் குறைவால் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

தன்மானமும் பட்டமும்

தமிழறிவு மிக்க வறுமையில் வாடிய புலவர்களை ஆதரிப்பதில் கதிரேசனார் வள்ளன்மை மிக்கவராக விளங்கினார். இவருடைய மனைவி மீனாட்சி ஆச்சியும் இவரின் பொதுத் தொண்டிற்குத் துணையாய் இருந்தார். பண்டிதமணி தன்மானத்தைக் காப்பதில் சிங்கமாக விளங்கினார். இவருக்கு பட்டம் வழங்கிச் சிறப்பிக்க அரசாங்கம் எண்ணியது. 'மகாமகோபாத்தியாயப் பட்டம்' ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்கே உரியது என எண்ணி அதற்குப் பதிலாக 'இராவ் பகதூர்' என்ற பட்டம் வழங்க விரும்பியது. அரசியலாரின் குறுகிய நோக்கத்தினையும் அறியாமையையும் அறிந்த பண்டிதமணி 'இராவ் பகதூர்' பட்டத்தை ஏற்க மறுத்தார். இவரின் தன்மானம் காக்கப்பட்டதோடு மட்டுமன்றி, அவரின் துணிவுக்குப் பரிசாக 'மகாமகோபாத்தியாயப் பட்டம்' அவரை நாடி வந்தது.

 

எழுதிய நூல்கள்

மொழிபெயர்ப்பு நூல்கள்

பல வடமொழி நூல்களை இவர் மொழி பெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த நூல்கள்

பிராதபருத்தரீயம்

மாலதி மாதவம்

சுக்கிர நீதி

உதயணன் சரிதை

சுலோசனை

மண்ணியல் சிறுதேர் (மிருச்சகடிகம்)

கெளடலீயம் பொருணூல் (கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்)

மிருச்சகடிகம்

இரசங்காதாரம்

இவற்றுள் பிராதபருத்தரீயம், மாலதிமாதவம் ஆகியவை அச்சிடப்படவில்லை. சுக்கிராச்சாரியார் என்பவர் எழுதிய சுக்கிரநீதி ஒரு நீதி நூல் ஆகும். அசோகன், சந்திரகுப்தன் ஆகிய மன்னர்கள் காலத்தில் நிலவிய நீதி, ஆட்சிமுறைகளை இந்நூல் விளக்குகிறது. இந்நூல் குறளின் கருத்துகள் பலவற்றோடு ஒத்த நீதிகளை உள்ளடக்கிய பெருமை வாய்ந்தது.

உரைநடைக்கோவை 1

உரைநடைக்கோவை 2

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு

பண்டிதமணி பாடல்கள்

பண்டிதமணி கடிதங்கள்

பதிற்றுப் பத்தந்தாதி

கதிர்மணி விளக்கம் (திருவாசக விளக்கம்)

மறைவு

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் இரத்தக் கொதிப்பின் காரணமாக மிகவும் துன்புற்றார். நோயின் தீவிரத்தால் 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் காலமானார்.